ஊழல் குற்றச்சாட்டு – 23

மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில்  ஊழல்

மீனவர்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் டீசலில், ஈவுஇறக்கமில்லாமல் ஊழல்  செய்வதில் அ.தி.மு.க.வினர்  வல்லவர்களாக உள்ளனர். மீனவர்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் டீசலில் 100 கோடி  வரை ஊழல்  நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சரின் உதவியாளர் ஒருவருக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதை சி.பி.சி.ஐ.டி.   போலிஸார் விசாரிக்கவேண்டுமென மீனவர்  சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழக மீன்வளத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. விசைப்படகு, பாரம்பரிய நாட்டுப்படகு, கண்ணாடி  நார்படகு, கண்ணாடி  நார் கட்டுமரம், இயந்திரம் பொருத்தப்பட்ட மரக்கட்டுமரம்,  வல்லம் ஆகியவற்றுக்கு விற்பனை வரி  விலக்கு  அளிக்கப்பட்டு மானிய விலையில் டீசல்  வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் விசைப்படகுகளிக்கு மாதந்தோறும் 1,500 லிட்டர் வீதம் 11 மாதங்களுக்கும், சிறு  படகுகளுக்கு 300 லிட்டர் வீதம் ஆண்டுமுழுவதும் கடலோர மாவட்டங்களில் உள்ள மீன்வளத்துறை சார்பு நிறுவனங்களாக மீன்வளர்ச்சிக் கழகம், மாநிலக் கூட்டுறவு இணைய விநியோக நிலையங்கள் மூலமாக  வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், மீனவர்களுக்கு அளிக்கவேண்டிய டீசலை அதிகாரிகள் முறையாக வழங்காமல், அவர்களே இடைத்தரர்களை நியமித்து அவர்கள்மூலம் வழங்கிக் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி,  டீசல் விநியோக அட்டையைக்கூட இடைத்தரர்களிடம் மொத்தமாக விற்று,  அதற்கான அனுமதியையும் மாதந்தோறும் வழங்குவதுபோல்  மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் மீன்வளத்துறை அமைச்சர் உதவியாளருக்கும் பெரும் பங்குண்டு.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், விழுப்புரம்  ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் சுமார் 12 லட்சத்து 24 ஆயிரம் லிட்டர் விற்பனை  வரி விலக்கப்பட்டு கிடைக்கும் டீசலைச் சுமார் ரூ.7முதல் 8வரை குறைவாக இடைத்தரர்களுக்கு அரசு டீசல்  விநியோக நிலையங்களிலேயே கொடுத்து வருகின்றனர். இதன்மூலம் ஒரு ஆண்டுக்குமட்டும் ரூ.100   கோடி  வரை ஊழல் நடைபெறுகிறது.

மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிற காலகட்டத்தில், மீனவர்களுக்கு மானியத்தில் வழங்கப்படுகிற  டீசலில் ரூ.100   கோடி  வரை கொள்ளையடிக்கிற ஒரு அரசு இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும். இத்தகைய  ஊழல் அரசை உரிய விசாரணை  மூலம் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தித் தண்டனைக்குட்படுத்தினால்தான் வருங்காலங்களில் மக்கள் நலன்சார்ந்த அரசு செயல்படுவதற்கு  வாய்ப்பு ஏற்படும்.

Leave a comment