பிஜேபி சொல்லும் ‘தேசத்துரோகத்திற்கான அளவுகோல்’ – 1

 

சமீப காலங்களாக பிஜேபியினர், யார் ‘தேசபக்தர்’, யார் ‘தேசத்துரோகி’ என்று சான்றிதழ் வழங்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு பல பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் துணை போய்க் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஏன் திடீரென்று இந்த வேலையைக் கையில் எடுத்து இருக்கின்றனர் என்று ஆராய்ந்தால் 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், மக்களுக்கு வாக்களித்த பல பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

பல துறைகளில் தோல்வியடைந்து வருகிறார்கள். எனவே, அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிடவே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய விவரங்களை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

I.பொருளாதார வளர்ச்சிகறுப்புப்பணம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய இவர்கள்அளித்த வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வி:

  1. கருப்புப் பணத்தை வெளிநாடுகளிலிருந்து மீட்டு வருவோம். ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்குளிலும் ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதி, இதை பாஜக தலைவர் அமித் ஷா மொழியில் கூறவேண்டுமென்றால், வெறும் ஜும்லாவாக ஆகிவிட்டது.
  2. புதிய முதலீடுகள் இல்லை.
  3. வேலைவாய்ப்புகள் இல்லை.
  4. தொழில் உற்பத்தி மந்தம்..
  5. கடந்த 15 மாதங்களாக ஏற்றுமதி மந்தம்.
  6. விவசாய வளர்ச்சி இல்லை. 2014 பொதுத்தேர்தலின் போது நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு விவசாயப் பொருட்கள் உற்பத்திக்கு செலவிடப்படும் தொகையை விட, அதற்கு மேல் 50% லாபம் வைத்து குறைந்த பட்ச ஆதார விலையை (MSP) உயர்த்துவேன் என்றார். அதில் தோல்வியடைந்தார். இதில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
  7. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) திட்டம் தோல்வி.
  8. டிஜிட்டல் இந்தியா (Digital India) திட்டம் கனவாகவே உள்ளது.
  9. தூய்மை இந்தியா (Clean India) திட்டம் தோல்வி.
  10. கங்கையை சுத்தப்படுத்திடும் திட்டம் தோல்வி.
  11. பட்ஜெட்: 2016-17 ஆண்டுக்கான பட்ஜெட், பொதுமக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
  12. கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தைப் பற்றி பட்ஜெட்டில் எதுவுமேயில்லை.
  13. அரசியல்தோல்விகள்

2014 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று பாஜக இனி அடுத்து வரும் தேர்தல்கள் அனைத்திலும் ‘மோடி மாயை’ வைத்து வெற்றி பெற்று விடலாம் என பாஜகவினர் இறுமாப்புடன் இருந்தனர். ஆனால் ‘மோடி மாயை’  தேய ஆரம்பித்து விட்டது. 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பாஜக தோல்வியைத்தான் தழுவிக் கொண்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற,

  1. டெல்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வி
  2. உத்திரபிரதேச சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி
  3. மத்திய பிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி
  4. மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி
  5. சட்டீஸ்கர் உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி
  6. பீஹார் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி
  7. குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி
  8. கர்நாடகா மேலவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி

என்று கடந்த ஓராண்டாக பாஜக தோல்விiயையே சந்தித்து வருகிறது. ‘மோடி மாயை’ ஒரு தாக்கத்தையும் இத்தேர்தல்களில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்திட முடியவில்லை.

III. வெளியுறவுத்துறை முயற்சிகளில் தோல்வி

பாகிஸ்தான்

பாகிஸ்தானுடன் தன்னை மிகவும் நெருக்கமானவராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் மோடி. ஆனால், இவரால் பாகிஸ்தானிடம் இருந்து எந்தவிதமான ஆதாயமும் பெற முடியவில்லை.

மோடி ஒரு அஞ்சா நெஞ்சன், 56′ மார்பு என்றெல்லாம் கூறி, மோடி பிரதமராக ஆகிவிட்டால், பாகிஸ்தானின் வாலை ஒட்ட நறுக்கி விடுவார் என்று பாஜக வினர் பிரச்சாரம் செய்தனர்.

முதலில் பாகிஸ்தானுடன் நேசக்கரம் நீட்டிப் பார்த்தார். தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபை விருந்தினராக அழைத்தார். பின் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவரும், பாகிஸ்தான் பிரதமரும் நெருங்கிய நண்பர்கள் என்று நாடகம் நடத்தி அதனால் இந்திய-பாகிஸ்தான் பிரச்சினைகளை தீர்த்திட முடியும் என மக்களை நம்பவைத்தார்.

உதாரணமாக, ரஷ்யாவிலுள்ள UPA எனும் நகரில், SCU – உச்சிமாநாட்டின் இடையில் சந்தித்து பேசிய போது, 26.11.2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு வழிவகுத்த ‘லக்வி’ எனும் பாகிஸ்தான் தீவிரவாதியின் குரல் மாதிரியை (Voice Sample) ஐத் தருவதாக வாக்களித்தார். ஆனால், கடைசி வரை அதை நம்மிடம், பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ  கொடுக்கவேயில்லை. மோடிக்கு ஏமாற்றமே.

25.12.2015 அன்று லாகூருக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று சென்று, பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். பாகிஸ்தான் பிரதமருடன் தனது நெருக்கத்தை ஒரு நாடகமாகவே நடத்திக் காட்டினார்.

இந்திய பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் இந்த நாடகத்தை பிரமாதம் என்று பாராட்டின.

பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு மலர்ந்து விட்டது என்று புகழ்பாடின.

ஆனால், 02.01.2016 அன்று ‘பதான்கோட்’ விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து 4 நாட்கள் தங்கிருந்து கொண்டே, தாக்கியது தான் இந்த உறவிற்கு கிடைத்த பரிசு. 2016 ஆம் ஆண்டின் ஆரம்பமே ‘மோடி’ அரசிற்கு சரியாகவே இல்லை.

7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். விமானப்படைத் தளத்திற்கு எந்தவித சேதமில்லை என அரசு கூறி வருகிறது.

இது எவ்வளவு தூரத்திற்கு உண்மையோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

பாகிஸ்தான் இத்துடன் நின்றிடாமல் அனுதினமும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சர்வசாதாரணமாக நுழைந்து, இந்திய ராணுவ வீரர்களை தாக்கிக் கொல்லுகின்றனர்.

ஆனால், பாஜக வினர் கூறி வந்ததென்ன?

மோடி, மன்மோகன் சிங் போல் பயந்தவரில்லை. அவர் அஞ்சா நெஞ்சன். அவர் மட்டும் பிரதமராக வந்தால் பாகிஸ்தான் தன் வாலைச் சுருட்டிக் கொண்டு தனது வலைக்குள் ஓடிவிடும் என்று, அன்று வீராவேசம் பேசிய பாஜகவினரும், அவரது ஆதரவாளர்களும் இன்று வாயை மூடி மௌனம் காக்கின்றனர். பாகிஸ்தான் விஷயத்தில் அவரது தோல்வியைக் கண்டும் காணாதது போல் இருக்கின்றனர்.

சீனா

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர், ‘ஜி ஜிம்பிங்க்‘ இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக மோடியின் மாநிலமான குஜராத்தின் தலைநகரம் அகமதாபாத்திற்கு விஜயம் செய்தார். மோடியும், ஜியும் சமர்பமதி நதிக்கரையிலுள்ள பூங்காவில் ‘பொன்னூஞ்சல்’ ஆடிக் கொண்டிருக்கும் பொழுது சீனப்படையினர் இந்தியாவின் ‘லடாக்’ பகுதிகளை ஆக்கிரமித்து விட்டனர். இதுதான் சீனா, மோடியின்  வெளியுறவுக் கொள்கைக்கு காட்டிய மரியாதை. பிரமாதம் என்று மோடியைப் பற்றி ஆரவாரம் செய்து பாராட்டிக் கொண்டிருந்த பாஜக வினரும் இப்பொழுது வாய்மூடி மௌனமாக உள்ளனர்.

மோடியின் வெளியுறவுக் கொள்கையில், அவர் ஜப்பானுக்கு சென்று ‘கொட்டடித்ததும்’, மங்கோலியாவில் ‘வில்விட்டதும்’ தான் மிச்சம்.

ஸ்ரீலங்கா

மோடி பிரதமராக வந்தால், ஸ்ரீலங்கா பயந்து நடுங்கும். இலங்கைக் கப்பற்படையினர், பயந்து ஒளிந்து கொள்வார்கள். கச்சதீவு நம் வசமாகும். தமிழக மீனவர்கள் தங்குதடையின்றி மீன்பிடித்து வரலாம். ஆனால், தற்பொழுது நடப்பதென்ன?

முந்தைய ஆட்சியிலாவது, சிங்களக் கடற்படையினர்களால், நமது மீனவர்களுடன் மீனவர்களின் படகுகள் பிடிக்கப்பட்டால், படகுகளையும் சேர்த்து விடுதலை செய்யும் முறை இருந்து வந்தது.

மோடி, பிரதமானபின் மீனவர்களின் படகுகள் பிடிபட்டால், மீனவர்களை விடுவித்து, படகுகளை தன்வசம் வைத்துக் கொள்வதுதான் முறையாக இருக்கிறது.

ஒட்டக்கூத்தான் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாகி விட்டது.

இதனால், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமே அடியோட அற்றுப்போனதுதான் மிச்சம்.

இதிலும் தோல்வியையே பிரதமர் சந்தித்துள்ளனர். நமது முதல்வரும் மீனவர்களையும், அவர்தம் படகுகளையும் விடுவிக்க, சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் மேல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுதிக் கொண்டேயிருக்கிறார். பலன் எதுவுமேயில்லை.

நேபாளம்

நேபாளத்திலுள்ள, இந்திய வம்சவழியான ‘மாதேஷீகள்’ விவகாரத்தை மோடி அரசு சரிவரக் கையாளாததினால், நேபாள நாட்டுடன் நம்முடைய தொடர்பு தளர்ந்து போய் கொண்டிருக்கிறது.

பங்களாதேஷ், மாலத்தீவுகள் போன்ற அண்டை நாடுகளுடனும் உறவு மேம்பட்டதாகத் தெரிய வில்லை. பங்களாதேஷுடன் ‘ டியெஸ்டா’ நதித்தகராறு இன்னும் தீர்ந்தபாடில்லை.

பல வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள அதிபர்களையெல்லாம் கவர்ந்து விட்டார் மோடி எனப் பெருமையடித்துக் கொண்டிருந்தனர் பாஜகவினர்.

ஆனால், 26.1.2015, அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் அளித்த பேட்டியில்,

‘இந்தியாவில் சகிப்புத்தன்மை என்பதேயில்லை. சகிப்புத்தன்மை இல்லாத நாடு வளர்ச்சி காணவே முடியாது’ என்றார். வளர்ச்சியை நோக்கமாக வைத்தே அரசியல் நடத்தி வரும் மோடியின் வெளியுறவுக் கொள்கையானது தோல்வியை குறிபிட்டு சொல்வதாகவே ஒபாமாவின் பேச்சு இருந்தது.

ஒபாமா ஏன் இவ்வாறு கூறினார்?

(தோலுரிப்போம்)

12801181_1322202104472364_2829203052279732416_n

 

Leave a comment