அணு உலை சம்பந்தமான அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்: திரு.மன்மோகன் சிங் அவர்களின் ஒரு சாதனை – மோடி ஒப்பந்தம் ஒரு வேதனை

அமெரிக்க அதிபர், ஒபாமாவின் வருகையால் இதுவரை கிடப்பில் போட்ப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் செயல்பட ஆரம்பிக்கப் போகிறது. இதற்கு பிரதமர் மோடி சாமர்த்தியமாக வெளியுறவுக் கொள்கைகளை கையாள்வது தான் காரணம். டாக்டர் மன்மோகன் சிங் சாதிக்க முடியாததை மோடி சாதித்துவிட்டார். இது மோடி அரசின் மாபெரும் வெற்றியாகும் என்று பாஜக வினர் ஆரவாரிக்கிறார்கள்.

நன்கு ஆராய்ந்து பார்த்தால் இது உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவாகும்.

ஒப்பந்தம் பற்றிய உண்மை நிலை தான் என்ன?

அதற்கு இந்திய அணுசக்தி வரலாற்றைப் பற்றி சற்று தெரிந்து கொள்ளவேண்டும்.

1974 ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுத பரிசோதனை செய்தது. இதனால் வெகுண்டெழுந்த அமெரிக்காவும் ஏனைய NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிகக் குழு நாடுகளும் இந்தியாவுடன் கொண்ட அணுசக்தி வணிகத்தைத் துண்டித்துக் கொண்டது. அனைத்துலக நாடுகளில் ஏற்பட்டு வந்த பல புதிய அனுசக்தி தளவாடங்கள், புதிய அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பே அற்றுப் போய்விட்டது.

1998 ஆம் ஆண்டு இந்தியா மீண்டும் அணுஆயுத பரிசோதனையை மேற்கொண்டது. NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிகக்குழு நாடுகள் மேலும் இந்தியாவை விட்டு விலகிப் போயின.

2005 ஆம் ஆண்டில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, வெகுவேகமாக உயர ஆரம்பித்து உலக தட்பவெப்ப நிலை கட்டுப்பாட்டிற்காக, ஐ.நா. சபையால் எடுக்கப்பட்ட நிலைகளில் மிகவும் முக்கியமான அனைத்து நாடுகளும் நிலக்கரியின் உபயோகத்தைக் குறைத்து, சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் உதவியுடன் மின்சாரம் தயாரித்திட வேண்டும் என்ற கோரிக்கையால் உந்தப்பட்டு, இந்தியா தொழில் உற்பத்திக்குத் தேவைப்படும் மின்சக்தியை அதிகஅளவில், அணுசக்தி மின்சாரத்தைத் தயாரித்திட முயன்றது.

இதற்காக, அணுசக்தி வணிகத்தை, NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகளுடன் ஏற்படுத்திட வேண்டுமே ‚ ஆனால் இந்தியாவுடன் அவை அணுவணிகம் செய்ய மறுத்திட்டன.

பிரதமர் மன்மோகன் சிங் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் புஷ், NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகளிடம் இந்தியாவின் நேர்மையைப் பற்றி விரிவாகப் பேசி, அவற்றை இந்தியாவுடன் அணுசக்தி வணிக ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.

அமெரிக்க அதிபர் புஷ், NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகளுடன் (45 நாடுகள்) கூறினார், ‘இந்தியாவின் பொறுப்புணர்ச்சியை உலக நாடுகள் நன்கறியும். NPT–ல் (அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்) கையெழுத்திடாமல் இருந்தாலும், அணுசக்திப் பரவல் தடைக் கொள்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாடு. அணு ஆயுதச் சோதனைகளை செய்திடமாட்டோம் என்று தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்ட நாடு. ஆகவே இந்தியாவிற்கு விதிவிலக்கு அளித்திடுவதில் NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதில் எந்தத் தடங்கலும் இருக்காது என்று நம்புகிறேன்’ என்று வாதாடினார்.

ஆனால் ஆஸ்திரியா, நியூசிலாந்து, அயர்லாந்து. நெதர்லாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகள் இணைய மறுத்தன. இதற்குக் காரணம், இந்த நாடுகளுக்கு பின்னால் இருந்து கொண்டு சீனா இவர்களை தன் இஷ்டப்படி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.

சீன அதிபர் ஹி-ஜின்டோவிடம் தொலைபேசியில் ‘ஹி-ஜின்டோ அவர்களே, நீங்கள் இந்தியாவுடன் NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகள் அணு வணிக ஒப்பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறி வருகிறீர்கள் என்றறிந்தேன். டாக்டர் மன்மோகன் சிங் நேர்மையானவர், நம்பிக்கையானவர் அவரது கோரிக்கையை நாம் கட்டாயம் ஏற்கத்தான் வேண்டும்’ என்று கடுமையாகச் சாடினார் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் இந்த உறுதியான நிலை, சீனாவை அடிபணிய வைத்தது.

(Beijing Capitulated only after George Bush called Jintao – Times of India – Dated- 7.9.2008)

ஹி-ஜின்டோ உடனடியாக ஜார்ஜ் புஷ்ஷின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இது தெரிந்தவுடன் ஏனைய NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகளும் ஜார்ஜ் புஷ்ஷின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, இந்தியாவுடன் அணு வணிக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றின.

எனவே அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் NPT மற்றும் அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம் CTBT ஆகியவற்றில் கையெழுத்திடாமல், நமக்குரிய எந்த உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் 45 நாடுகளிடம் ஒப்புதல் பெறக்கூடிய பணியை, அமெரிக்கா அதிபரையே செய்ய வைத்த பெருமை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையே சாரும்.

அதிபர் புஷ், டாக்டர் மன்மோகன் சிங் மீது வைத்திருந்த பெரும் மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் தான் இதற்குக் காரணம். இந்திய – NSG (Nuclear Supply Group) அணுசக்தி வணிக்க்குழு நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தின் இந்த விதிவிலக்கிற்குப் பின் இந்தியா, எந்த ஒரு அணு வணிக நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதனால் பல நாடுகளுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. ரஷ்யா. பிரான்ஸ் தவிர. அதில் ஒன்றுதான் இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் இந்த வெற்றிக்கு நாயகன் டாக்டர் மன்மோகன் சிங் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனால், டாக்டர் மன்மோகன் சிங் மகத்தான சாதனையை பாஜக வினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இடது சாரிகளும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பாஜக வின் தலைவர்கள், ‘இந்த ஒப்பந்தம் இந்திய இறையாண்மையை முற்றிலுமாகப் பாதித்திடும். இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த ஒப்பந்தத்தினால் இனி இந்தியா அணு ஆயுதமே தயாரித்திட முடியாது. இது நமது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக முடியும்’ என்று குற்றம் சாட்டினார்கள்.

2008 ஆம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 1 அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் ‘நமது நாட்டில் மொத்தம் 22 அணு உலைகள் உள்ளன. இதில் 14 உலைகளுக்குத்தான் வெளிநாடுகளிலிருந்து யூரேனியம் தருவிக்கப்படுகிறது. இந்த 14 உலைகள் தான் I.A.E.A. (ஐ.நா.வின் அனைத்துலக அணுசக்தி அமைப்பின்) கண்காணிப்பின் கீழ் வரும். மீதமுள்ள 8 உலைகள். இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணு உலைகளாலும், இந்தியாவில் கிடைத்திடும் யூரேனியத்தினாலும் இயக்கப்படும். இவைகளிலிருந்து நமக்கு வேண்டிய அணு ஆயுத நாடுகளே தயாரித்துக் கொள்ளலாம். நமது பாதுகாப்பிற்கு எந்தவிதமான பங்கமும் ஏற்படாது’ என உறுதியாக் கூறினார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு – 2009 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதற்கு டாக்டர் மன்மோகன் சிங்கின் சாதனையும் ஒரு காரணமாகும்.

எப்படியாவது இந்த சாதனையை சிதைத்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். இல்லாவிடில், அமெரிக்காவிலுள்ள தொழிலதிபர்கள் தங்கள் அணுஉலைகளை இங்கு நிறுவி விடுவார்களே என்று பொரும ஆரம்பித்தனர். இதனால், இந்தியாவில் அணுசக்தி மின்சாரம் பெருகிவிடுமே, காங்கிரஸ் கட்சிக்கு பெயர் வந்திடுமே என்று பொருமினர்.

இதை எப்படியாவது தடுத்து நிறுத்திட, மிகவும் முனைந்து செயல்பட ஆரம்பித்தனர். அதற்கேற்றாற் போல், ‘போபால்’ விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, அமெரிக்க நிறுவனமாக ‘யூனியன் கார்பைட்’ நஷ்ட ஈடு கொடுக்காமல் தப்பித்து விட்டது என்றும், அதற்கு ராஜீவ் காந்தி உதவி செய்திட்டார் என்ற செய்தியும் வந்தது. அதையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் சேர்த்துப் பார்த்து, இதுபோல் அமெரிக்கா நிறுவிடும் அணுநிலையங்களில் விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டோருக்கு நஷ்;ட ஈட்டுத்தொகை அனைத்தையும் வெளிநாட்டு நிறுவனமே ஏற்றிடவேண்டும் என்ற அம்சத்தை, அணுசக்தி விபத்து மற்றும் ஈட்டுத் தொகைச் சட்டத்தில் (Nuclear Liability Law) கட்டாயம் சேர்த்திட வேண்டும் என வாதிட்டனர் பாஜக வினர். அதில் முன்னின்று வாதிட்டவர் அருண் ஜெட்லி.

அருண் ஜேட்லி:

‘அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அதில் பாதிப்படைந்தோர் அனைவருக்கும் அவர்கள் வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, இந்தியரா இருந்தாலும் சரி, நிறுவியவர்களே ஈட்டுத் தொகை கொடுத்திடும் பொறுப்பை அவர்களே ஏற்றிட வேண்டும். அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சரி’ என்று கூறினார். அவரது அறிவுரையை ஒட்டி இச்சட்டத்தின் ஷரத்துக்கள் கடுமையாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கடுமையினால். வெளிநாட்டிலிருந்து யாரும் இந்தியாவில் அணு உலையை நிறுவ முன்வரவில்லை.

ஒப்பந்தம் நிறைவேறிய போதும், எதிர்பார்த்தபடி அணு உலைகளை நிறுவ முடியவில்லை. பாஜக வினர் மிகுந்த மகிழ்ச்சி களிப்பில் இருந்தனர்.

2014 தேர்தலுக்குப் பின் காட்சி மாறியது:

NDA அரசு மத்தியில் பதவிக்கு வந்தது. இன்று நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய அணு உலைகள் தேவை என்பதை பாஜக வினர் உணர ஆரம்பித்தனர். ஆனால், அமெரிக்க நிறுவனங்களோ, ‘ Nuclear Damages Act – 2010 ல் உள்ள ஈட்டுத்தொகை பற்றிய அம்சத்தை அறவே ரத்து செய்தாலொழிய நாங்கள் இந்தியாவில் அணு உலைகள் நிறுவ முன்வர மாட்டோம் என்கின்றனர்.

இந்தச் சிக்கலை எப்படி தீர்ப்பது?

ஒபாமாவின் இந்திய வருகையின் போது, மோடியும் ஓபாமாவும் சேர்;ந்து இச்சிக்கலை தீர்த்து வைத்துவிட்டனர். ஆகா‚ மாபெரும் வெற்றி அடைந்து விட்டார் மோடி. டாக்டர் மன்மோகன் சிங் 4 வருடங்களில் சாதிக்க முடியாததை, மோடி 7 மாதத்தில் சாதித்துவிட்டார் என்று கும்மாளம் போடுகின்றனர்.

ஆனால், உண்மையான நிபந்தனைகள் என்ன?

  1. இனி வெளிநாட்டு நிறுவனங்கள், ஈட்டுத்தொகையை கொடுக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டாம்.
  2. 244 மில்லியன் டாலரில் ஒரு இன்சூரன்ஸ் நிதி எற்படுத்திடவேண்டும். இதில் பாதியை இந்தியாவின் இன்சூரன்ஸ் கம்பெனியான ஏற்றுக் (GIC) கொள்ளவேண்டும். மீதிப்பகுதியை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இதனால், அமெரிக்கா அணு உலை அதிபர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், முன்னாள் அணுசக்தி ஆலையத் தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன், ‘அப்படியானால் இந்த விபத்து ஈட்டுத்தொகை அனைத்தும் இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து அல்லவா கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. வெளிநாட்டு நிறுவன அதிபர்கள் ஈட்டுத்தொகையிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்றல்லவா தோன்றுகிறது. இதுதான் மோடியின் ஒப்பந்தத்தின் வெற்றியா?’ என்று கூறி எள்ளி நகையாடுகிறார்.

எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு வெற்றி, வெற்றி என்று வெறும் கூச்சல் போடுகின்றனர். உண்மை ஒருநாள் வெளிவரும். அன்று ஏமாற்றுக்காரர்களின் முகமூடி கிழியும். இது நிச்சயம்.

உண்மையில்,

ஜார்ஜ் புஷ் – டாக்டர் மன்மோகன் சிங் நட்பினால், இந்தியர்களுக்கு வெற்றி

ஒபாமா – மோடி நட்பினால் அமெரிக்கர்களுக்கு வெற்றி

பூனை கண்ணை மூடிக்கொண்டிருந்தால் பூலோகம் இருண்டுவிடாது.

001 002 004 005 006 007 008 009 010

Leave a comment